Home

"யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" என்ற சொற்றொடர் தமிழில் உண்டு. என்ன அந்த இன்பம்? உள்நாக்கில் தித்திக்கும் மதுரமா, அல்லது செவிகளில் வந்து பாயும் இன்னிசையா!


கிறுக்கல்களாய் உளறல்களாய் உருவெடுத்து, மண்ணிலும் கல்லிலும் பனைஓலைகளிலும் செம்மை பெற்று, வெள்ளைத்தாள்களில் வீட்டுக்கதவைத் தட்டி, இன்று வலைத்தளங்களின் வழியாய் விழிகள் திறக்க வைத்து, பல்வேறு ஊடகங்களில் தன் உயிர் சீவன் ஊற்றிய பின்பும் உயிர் வாழ்ந்து கொண்டு பிற உயிர்களை வாழவைக்கும் காற்றைப்போல் வயதில்லாமல் வாழும் தமிழ் மொழியே யாம் பெற்ற இன்பம்! எம் தமிழர் பெற்ற இன்பம்!


அவ்வின்பத்தை வரையறுக்க முடியாமல், "தேமதுரத் தமிழோசை" என்றான் பாரதி. அதை "உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும்" என்ற கனவும் கண்டான். இளங்கவி பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரைப்போல் "தாயால் பிறந்தேன் தமிழால் வளர்ந்தேன்" என்றுணர்ந்தவர், உலகின் கடைகோடிக்கு சென்றாலும் தாயையும் தமிழையும் விட்டுச்செல்வரோ?


தமிழ் மொழி, சிந்தனை, வாழ்வியல் முறைகள் ஆகியவற்றைச் சுவைத்து பின்வரும் தலைமுறையினருக்கும் விட்டுச்செல்ல நினைக்கும் ஒவ்வொரு தமிழ் அன்பருக்கும் தமிழ் இலக்கியங்கள் இன்றியமையாத திறவுகோள்.


மிக தொன்மையான தமிழ் இலக்கிய வகைகள் மற்றும் இலக்கண நூலான தொல்காப்பியம் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டில் மக்கள் மனதில் ஆழ்ந்த கருத்துக்களை விதைத்த கூறிய சிந்தனை கொண்ட சில எழுத்தாளர்களின் வெளியீடுகள் வரை "அந்தமில்" செயலி உள்ளடக்கியுள்ளது.


'ம்மா', 'ப்பா' என்று தத்தை மொழி பேச முனைந்தவுடன் குழந்தைக்கு "அறம் செய்ய விரும்பு" என்று சொல்லித்தர விரும்பும் தமிழ் மைந்தனுக்கு அவ்வையின் "ஆத்திச்சூடி" மூலமும், உறங்கும்முன் மனம் இளைப்பாற ஒரு குண்டு நூலின் சில பக்கங்களை புரட்டிவிட்டு நடுவாய் நூல் குறியீடிட்டு தலையணை அருகே வைத்துவிட்டு கண் அயரும் இளைஞனுக்கு கல்கியின் "பொன்னியின் செல்வன்" மூலமாகவும் இந்த "அந்தமில்" மென்நூல்தொகுப்பு கண்டிப்பாக உதவும் என்பதில் ஐயமில்லை.


மண்ணுக்கு மழை போல், மனிதனுக்கு மொழி!

மொழியால் மனிதன் மனதிற்கு வளம் சேர்ப்போம்!